216 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

மாநிலம் முழுவதும் சீரான மின் விநியோகம் செய்ய 216 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

216 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்  - அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டபேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், சோழவந்தான் தொகுதி, கல்வேலிப்பட்டி, கொண்டையம்பட்டி மற்றும் இடையபட்டி ஆகிய பகுதிகளில் தேவையின் அடிப்படையில் புதிய துணை மின் நிலையம் அமைத்து தரப்படும் என்றார்.

மாநிலம் முழுவதும் சீரான மின் விநியோகம் செய்ய 216 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதன்படி 193 துணை மின் நிலையங்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்,
மேலும் 23 துணை மின் நிலையங்களுக்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்து 905 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

சென்னை மாநகராட்சியின் 5 கோட்டங்களில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி முழுவதிலும் புதைவட மின் கம்பிகள் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.