2022ஆம் ஆண்டுக்கான நல்லாளுமை விருது பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

2022ஆம் ஆண்டுக்கான நல்லாளுமை விருது பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

2022ஆம் ஆண்டுக்கான நல் ஆளுமை விருதுக்குத் தேர்வாகி உள்ளவர்களின் விவரங்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது...

நல் ஆளுமை விருதுகள்:

ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது, அரசுத் துறைகள், அரசு ஊழியர்கள், அரசு சார்பு அமைப்புகள் ஆகியவற்றின் சிறந்த செயல்பாடுகளைப் பாராட்டி இந்த நல் ஆளுமை விருதுகள் வழங்கப்படுகின்றன.

பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு:

வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, இந்த ஆண்டு நல்லாளுமை விருதுக்குத் தேர்வானவர்களின் விவரங்களைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

யார்?யார்? என்பதை பார்ப்போம்:

1. செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவர்களை மீட்டெடுத்து செங்கல் சூலைகளை அவர்களே நடத்திடும் வகையில், தொழில் முனைவோராக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய பணிக்காக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும், 

2. சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்கள் நிலையான வளர்ச்சி இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொண்டதற்காகச் செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலருக்கும்,
 
3. மழை நீரை சேகரித்து மூன்று அடுக்குகளாகச் சுத்திகரிக்கும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி நிலத்தடி நீரைச் செறிவூட்டும் பணிகளைச் செய்தமைக்காக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கும்

4. நீர்நிலைகளைத் தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகிய செயல்களைக் குறைந்த செலவில் மேற்கொண்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கும்,

5. தாய்மார்களின் பேறுகால நலனை தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் கண்காணித்துச் சிறப்பான சுகாதார திட்டத்தை முன்னெடுத்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு,

6. வேளாண் இயந்திரங்களைக் கைப்பேசி செயலி மூலம் வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தி விவசாயிகள் பயன்பெறச் செய்த தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் முதன்மைப் பொறியாளருக்கும்

7. சென்னையில் ஆதரவற்ற, மனநலன் பாதிக்கப்பட்டோரை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து, பராமரிக்கும் திட்டத்தை செயல்படுத்திய சென்னை பெருநகர காவல் துறை ஆணையாளருக்கும், நல்லாளுமை விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அர்சு தெரிவித்துள்ளது.

8. தொடர்ந்து, தேர்வுக்குழுவின் பரிந்துரையின்படி உண்ணி மரச்செடிகள் மூலம் கைவினை பொருட்கள் தயாரித்தல், கைத்தறி, கைவினை பொருட்களை நேரடி சந்தைப்படுத்துதல், கரூரின் கண்மணிகள் திட்டம் உள்ளிட்ட 12 முயற்சிகளுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவின்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாளுமை விருதுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.