2020 - ல் அவமதிப்பு...இன்று கெளரவிப்பு...ஆனால் நாளை..?

2020 - ல் அவமதிப்பு...இன்று கெளரவிப்பு...ஆனால் நாளை..?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு முன்னிலையில் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம்மாள் தேசியக் கொடியேற்றினார். 

2020 ஆம் ஆண்டு தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுப்பு:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆத்துப்பாக்கம் பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவரான அமிர்தம்மாள், கடந்த 2020-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவின்போது தேசியக் கொடி ஏற்ற விடாமல் சிலர் அவமதித்தனர். இந்த சம்பவம் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எச்சரிக்கை விடுத்த அரசு:

பட்டியலின பெண்ணை தேசியக் கொடி ஏற்ற விடாமல் சிலர் அவமதித்த சம்பவம், இனிமேல் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டது.  அதன்படி ஊராட்சி மன்ற தலைவர்களுக்குப் பதிலாக, வேறு எவரேனும் கொடி ஏற்றினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இன்று கொடியேற்றிய அமிர்தம்மாள்: 

இந்தநிலையில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆத்துப்பாக்கம் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது ஊராட்சி மன்ற  அலுவலகத்திற்கு சென்ற அவர், வளர்ச்சிப் பணிகள் குறித்து தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் உள்ள கம்பத்தில், தலைமைச் செயலாளர் முன்னிலையில் 75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அமிர்தம்மாள் இன்றே தேசியக் கொடியேற்றினார். பட்டொளி வீசிப் பறந்த தேசியக் கொடிக்கு அனைவரும் மரியாதை செலுத்தினர். 2020 ஆம் ஆண்டு பட்டியலின பெண் என்பதற்காக ஒதுக்கப்பட்டவர், இன்று அதே இடத்தில் தேசிய கொடியை ஏற்றி கெளரவிக்கப்பட்டார்.

நாளை அதே இடத்தில் கொடி ஏற்றுவாரா?:

கடந்த 2020 ஆம் ஆண்டு அவமதிக்கப்பட்ட பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவரான அமிர்தம்மாள்,நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றியது ஒரு பக்கம் இருந்தாலும், ஏன் இன்று ஏற்றினார்..என்ற கேள்வி ஆராய வேண்டிய ஒன்றாக உள்ளாது. 75வது  சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்றே அமிர்தம்மாளை கொடியேற்ற வைத்தது ஏன்? இன்று ஏற்றியது போல நாளையும் ஏற்றுவாரா? என்ற சந்தேகத்தையும் சிலர்  எழுப்புகிறார்கள்.