தண்ணீரில் மூழ்கிய 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் : அறுவடைக்கு தயாராயிருந்த இருந்த நேரத்தில் வேதனை

அறந்தாங்கி அருகே மழையின் காரணமாக 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்தனர்.  

தண்ணீரில் மூழ்கிய 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் : அறுவடைக்கு தயாராயிருந்த இருந்த நேரத்தில் வேதனை

தமிழகத்தில் தற்போது ஜனவரி மாதத்தில் அறுவடை நேரம் ஆகும். இதில் விவசாயிகள் சிலர் ஆங்காங்கே அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 3 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடை செய்ய இருந்த நேரத்தில், மழையில் நெற்பயிர்கள் நாசமானதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். 

நெற்பயிர்கள் சேதத்தால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. நகைக்கடன் வாங்கி விவசாயம் செய்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள இழப்பிற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைப்போல நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இதனால் மிகுந்த வேதனை அடைந்துள்ள விவசாயிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்கி நெல் சாகுபடி செய்துள்ளதாகவும், தற்போது மழைநீரால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 78 புள்ளி 2 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் தாழ்வான இடங்கள் மற்றும் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.