தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம்.. நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ காட்சி!!

தஞ்சை தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பிரத்யேக காட்சிகள் வெளியாகியுள்ளன.

தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம்.. நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ காட்சி!!

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் மடத்துக்கான கோயிலில் அப்பர் பிறந்த சித்திரை சதய நட்சத்திர தினத்தையொட்டி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

நேற்று அதிகாலை தேரை திருப்ப முயற்சித்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரத்தில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் தேர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். 15பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மின்சாரம் பாய்ந்தில் தேர் முழுவதுமாக பற்றி எரியும் பிரத்யேக வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடந்தோரின் காட்சி காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.

இந்த துயர சம்பவத்தை அறிந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் சொல்வதற்காக களிமேடு கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உடலுக்கு  மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர், தமிழக அரசு அறிவித்த 5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் எரிந்த நிலையில் இருந்த தேரை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர், அங்கிருந்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்ற அவர், தேர்விபத்தில்  காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாணரத் தொகைக்கான காசோலையை வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துயரமான இந்த சூழலிலும் சிலர் அரசியல் செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.