தொடர் மழையால் 2 நாட்களில் 11 அடி உயர்ந்த நீர்மட்டம்.. சோத்துப்பாறை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணை நீர்மட்டம் இரண்டே நாட்களில் 11 அடி உயர்ந்துள்ளது.

தொடர் மழையால் 2 நாட்களில் 11 அடி உயர்ந்த நீர்மட்டம்.. சோத்துப்பாறை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி!!

பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் கடந்த 15 நாட்களுக்கு முன் நீர்மட்டம் 75 புள்ளி 11 அடியாக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான அகமலை, கண்ணக்கரை மற்றும் சொக்கன்நிலையில் பரவலாக மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 102 புள்ளி 66 அடியாக இருந்தது.

இந்தநிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் பெய்த கனமழையால் இரண்டே நாட்களில் 11 அடி உயர்ந்து அணை நீர்மட்டம் 113 புள்ளி 16 அடியானது. அணைக்கான நீர்வரத்து 126 கனஅடியாக உள்ள நிலையில் குடிநீருக்காக 3 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் முழு கொள்ளளவு 126 புள்ளி 28 அடி என்ற நிலையில் மழை தொடர்ந்தால் ஓரிரு நாளில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை மழையால் சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டும் நிலைக்கு வந்துள்ளது பாசன விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.