இறைக்குரு ‘திருக்குறள் மணி’10 ஆம் ஆண்டு நினைவு நாள்...சீமான் புகழ் வணக்கம்... 

இறைக்குரு ‘திருக்குறள் மணி’10 ஆம் ஆண்டு நினைவு நாள்...சீமான் புகழ் வணக்கம்... 

தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவரும், முதுபெரும் தமிழறிஞரும், நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பாசறைப் பொறுப்பாளருமான அப்பா ‘திருக்குறள் மணி’ இறைக்குருவனார் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் ஆழ்ந்த புலமை பெற்ற அப்பா இறைக்குருவனார், 1964-65 காலகட்டத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்துக் களத்தில் நின்று போராடிய முதன்மையான மொழிப்போர் வீரர் ஆவார்.

சீமான் புகழாரம் : 

1968 இல் தேவநேயப்பாவாணர் தோற்றுவித்த கழகத்தில் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, தஞ்சையில் ‘தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடு’ நடத்திய பெருமைக்குரியவர். அதுமட்டுமின்றி மனு தரும நூல் எரிப்புப் போராட்டத்தில் தென்மொழி ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனாருடன் இணைந்து கலந்து கொண்டு சிறை சென்றார். ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மகளைக் காதல் திருமணம் புரிந்ததோடு தென்மொழி அவையம் , பாவலரேறு பெருஞ்சித்திரனார் அறக்கட்டளை, பாவலரேறு தமிழ்க் களம் ஆகிய அமைப்புகளை ஏற்று நடத்தியவர்.

அதன்பின் ஐயா பழ.நெடுமாறன் தலைமையில் இயங்கும் உலகத் தமிழர் பேரவையில் துணைத்தலைவராக இருந்தார். தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான போராட்டங்கள், மாவீரர் வீரவணக்க நாள் ஆகியவற்றை முன்னின்று நடத்திய முன்னோடி. அதுமட்டுமின்றித் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி பரப்புரைப் பயணம் பட்டினிப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திய தீரமிக்கப் போராளி. இசையிலும் வல்லவரான அப்பா இறைக்குருவனார் அவர்கள் திருக்குறள், தேவாரம் ஓதித் தமிழ்நெறியில் பல திருமணங்களை நடத்தி வைத்துத் தமிழ்ப் பண்பாட்டுப் மீட்பராகவும் திகழ்ந்தவர். தமிழ்த்தேசியத்தலைவரின் அழைப்பையேற்று தமிழீழத் தேசத்திற்குச் சென்று ஈழ நாட்டில் சிறிது காலம் தமிழ்ப் பணியாற்றியதோடு, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று தேமதுர தமிழோசை தெருவெங்கும் பரப்பிய பெருந்தொண்டர்.

மேலும் தெரிந்து கொள்ள | காயத்ரிக்கு ஆதரவாக வந்த கஸ்தூரி..! மானம் கெட்ட பிழைப்பு என ஆவேசம்..!

மொழிப்புரட்சி, தமிழரா? திராவிடரா?, தமிழ்நாட்டில் பிற மொழிக்கவர்ச்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நூற்களை எழுதி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்ததோடு சிறந்த உரை ஆசிரியராகவும் திகழ்ந்தவர். பெருஞ்சித்திரனார் மறைவுக்குப்பின் தென்மொழி மற்றும் குன்றக்குடிகளார் நடத்திய தமிழகம் ஆகிய இதழ் ஆகியவற்றைப் பொறுப்பேற்று நடத்தியவர். மேலும், பாவை, வலம்புரி, சுதேசமித்திரன், மாலை முரசு, ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகவும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் மற்றும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி ஆகியவற்றில் பதிப்பாசிரியராகவும் பணியாற்றிய அருந்தமிழ்ச் செம்மல் அப்பா இறைக்குருவனார் அவர்கள்.

நாம் தமிழர் கட்சி தோற்றுவித்தவுடன் தமிழ்மொழி மீட்சிக்கும், தமிழின எழுச்சிக்கும், தமிழ்த்தேசிய அரசமைவது அவசியம், அதற்கு நாம் தமிழர் அரசியல் அதிகாரத்தை அடைவது அவசியம் என்ற உள்ள உறுதியுடன் கட்சியில் தம்மை இணைந்துகொண்டு, ஆன்றோர் பாசறைப் பொறுப்பாளராகப் பணியாற்றித் தமது இறுதிக்காலம்வரை தமிழ்த்தேசிய அரசியலுக்குத் தோள்கொடுத்துத் துணைநின்ற நமது போற்றுதலுக்குரிய வழிகாட்டி அப்பா இறைக்குருவனார் அவர்கள்.

தலைசிறந்த தமிழறிஞராகவும், தன்னிகரற்ற போராளியாகவும் திகழ்ந்த அப்பா இறைக்குருவனார் அவர்கள் மறைந்தபோதும், தமிழுக்கும், தமிழருக்கும் அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பெரும்பணிகள் வரலாற்றில் என்றென்றும் அவரது புகழைப்பறைசாற்றும்.

மேலும் தெரிந்து கொள்ள | மாநில அளவிலான மருத்துவர்கள் கருத்தரங்கம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்..!