சசிகலாவின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 100 ஏக்கர் சொத்துகள் முடக்கம்...

செங்கல்ப்பட்டு மாவட்டம் பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவுடன் கூடிய  100 ஏக்கர் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை  மேற்கொண்டுள்ளது.

சசிகலாவின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 100 ஏக்கர் சொத்துகள் முடக்கம்...

சொத்து  குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். மேலும்  தமிழகம் முழுவதும் உள்ள  சசிகலாவுக்கு  சொந்தமான வீடு நிறுவனங்கள்   பங்களாக்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஒரே  நேரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் கணக்கில் காட்டாத தங்கம் வைரம்  வைடூரியம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. 

அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில் வரி ஏய்ப்பு  செய்து வாங்கப்பட்டதாக கூறி சசிகலாவுக்கு  சொந்தமான  சுமார் 1900  கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறை அதிரடி காட்டியது. இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி சில மாதம் அமைதி காத்து வந்த சசிகலா,  அண்மை காலமாக  அதிமுக தொண்டர்களுடன்  பேசிய தொலைப்பேசி ஆடியோவை வெளியிட்டு அரசியலில் தமக்கான இருப்பை உறுதிபடுத்தினார். 

அத்துடன் அதிமுகவை கைப்பற்றும் முனைப்பிலும் சசிகலா மறைமுகமாக காய்நகர்த்தி வருவதாக கூறப்பட்ட நிலையில் சசிகலாவின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.பினாமி தடுப்பு  சட்டத்தின் கீழ்  செங்கல்ப்பட்டு மாவட்டம் பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவுடன் கூடிய  100 ஏக்கர் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும்  பரபரப்பை கிளப்பியுள்ளது.