வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியருக்கு 10 புள்ளி 5 சதவீதம், சீர்மரபினருக்கு 7  சதவீதம், மற்ற பிரிவினருக்கு 2 புள்ளி 5 சதவீதம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியருக்கு 10 புள்ளி 5 சதவீதம், சீர்மரபினருக்கு 7  சதவீதம், மற்ற பிரிவினருக்கு 2 புள்ளி 5 சதவீதம் வழங்கி முந்தைய அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்னர், தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கிடையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில் இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக சட்ட வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய அலுவலர்களுடன் தமிழக அரசு கலந்தாலோசித்து வந்தது. இந்நிலையில் இந்த இடஒதுக்கீட்டிற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நாளான பிப்ரவரி மாதம் 26ம் தேதி முதல், இந்த சட்டம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்விச் சேர்க்கைகளிலும் இந்த இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வன்னியருக்கு 10 புள்ளி 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கான அரசாணையை வெளியிட்ட முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் சட்டத்தை இயற்றிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் அமைச்சர்களுக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்