இலங்கை கடற்படை தாக்குதலால்  உயிரிழந்த புதுக்கோட்டை மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு...

இலங்கை கடற்படை தாக்குதலால்  உயிரிழந்த புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இலங்கை கடற்படை தாக்குதலால்  உயிரிழந்த புதுக்கோட்டை மீனவர் குடும்பத்திற்கு  10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு...

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சுகந்தன், சேவியர் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் கடந்த 18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை ரோந்து கப்பல் இவர்களது படகு மீது மோதியதில் 3 பேரும் கடலில் விழுந்தனர். 

கடலில் தத்தளித்து கொண்டிருந்த சேவியர் மற்றும் சுகந்தன் ஆகியோர் காப்பாற்றப்பட்ட நிலையில், மீனவர் ராஜ்கிரண் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடலை தமிழக மீனவர்களிடம் ஒப்படைப்பதில் இலங்கை கடற்படை தாமதம் செய்து வருவதை கண்டித்து, கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் 3 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்திற்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மீனவர் ராஜ்கிரண் உடலை தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.