ஒரு கோடி ரூபாய் பரிசு... ஒலிம்பிக்கில் அசத்திய வீராங்கனை..

ஒரு கோடி ரூபாய் பரிசு... ஒலிம்பிக்கில் அசத்திய வீராங்கனை..

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா நேற்று முன்தினம் முடிவடைந்ததையடுத்து நேற்று காலை முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக தொடங்கியது. ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். 

கடந்த 2000 ஆம் ஆண்டில் கர்ணம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்றபின் தற்போது பளுதூக்குதலில் 2-வது வீராங்கனையாக சானு பதக்கம் வென்றுள்ளார். 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதலில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 202 கிலோ தூக்கி 4 விதமான முயற்சிகளிலும் அசத்தி வெள்ளியை உறுதி செய்தார்.  டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் பங்கேற்க இந்திய அளவில் தகுதி பெற்ற முதல் வீராங்கனையும் மீராபாய் சானுதான். அதுமட்டுமல்லாமல் பளுதூக்குதல் பிரிவில் பெண்கள் பிரிவில் பங்கேற்ற ஒரே வீராங்கனையும் சானு மட்டும்தான். கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்த சானு, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் நாடு திரும்புகிறார்.

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ள மீராபாய் சானுவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும்  பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மீராபாய் சானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான ஆரம்பம் என புகழாரம் சூட்டியுள்ளார். இதேபோல், இந்திய பிரபலங்கள் , கிரிக்கெட் பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்த மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங், மகத்தான சாதனை புரிந்ததற்காக அவருக்கு பரிசுத்தொகையாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.