மைக்கேல் பெல்ப்ஸ்ஸும் 28, ஒட்டுமொத்த இந்தியாவும் 28 .. ஒலிம்பிக்கில் இந்தியாவின் நிலை தான் என்ன? 

மைக்கேல் பெல்ப்ஸ்ஸும் 28, ஒட்டுமொத்த இந்தியாவும் 28 .. ஒலிம்பிக்கில் இந்தியாவின் நிலை தான் என்ன? 

உலக வரைபடத்தில் கண்ணுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும் குட்டி நாடுகள் கூட ஒலிம்பிக்கில் ஜொலிக்கின்றன. ஆனால், மக்கள் தொகையில் முதலாவது இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்தியா, இன்னமும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல தையத்தக்க போட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இதுவரை ஒலிம்பிக்கில் இந்தியா சாதித்தது தான் என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். இதுவரை ஒலிம்பிக்கில் 28 பதக்கங்களை அறுவடை செய்துள்ளார். ஆனால், 130 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியா, ஒலிம்பிக்கில் இதுவரை பெற்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையும் அதே 28 தான். இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கம் பெற்றுத்தந்தவர் என்ற பெருமை, நார்மன் பிரிட்சார்ட்டையே சேரும். கொல்கத்தாவில் இங்கிலாந்து தம்பதியினருக்கு மகனாக பிறந்த பிரிட்சார்ட், 1900ஆம் ஆண்டு பாரீசில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் தனியொருவராகக் கலந்து கொண்டார். அப்போது பிரிட்டிஷ் ஆட்சி நடந்ததால் இங்கிலாந்து சின்னம் பொறிக்கப்பட்ட கொடியுடன் பங்கேற்ற அவர், 200 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் தடை ஓட்டம் இரண்டிலும் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பிறகு 1920 முதல் இந்தியா அதிகாரப்பூர்வமாக ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் நிலையில், 1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்கில் ஹாக்கி விளையாட்டின் மூலம் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்தது. தயான்சந்த் போன்ற திறமைவாய்ந்த வீரர்களைக் கொண்டிருந்த இந்திய ஹாக்கி அணி, தொடர்ந்து 1980 வரையில் 8 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. ஆனால், 1980க்குப் பிறகு இந்திய ஹாக்கி அணியால் ஒரு பதக்கத்தை கூட வெல்ல முடியவில்லை

இதற்கிடையில், 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் கஷாபா தாதாசாஹேப் ஜாதவ் என்பவர் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார். அடுத்ததாக 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார். சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய மங்கை என்ற சாதனையைப் படைத்தார். 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

ஆனால், ஒலிம்பிக்கில் இந்தியாவின் தனிநபர் தங்கப்பதக்கத்திற்காக, ஒரு நூற்றாண்டு காலம் காத்திருக்க வேண்டிருந்தது. கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, தங்கப்பதக்கம் வென்று, ஒலிம்பிக் பதக்கமேடையில் இந்திய தேசிய கீதத்தை இசைக்க வைத்து, ஒட்டுமொத்த தேசத்தையும் பரவசப்படுத்தினார். அதே ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை வீரர் விஜயேந்திர சிங், மல்யுத்த வீரர் சுஷில்குமார் இருவரும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

2012 லண்டன் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் வீரர் விஜய்குமார், மல்யுத்த வீரர் சுஷில்குமார் இருவரும் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்த, பேட்மிண்டனில் சாய்னா நேவால், குத்துச்சண்டையில் மேரி கோம், துப்பாக்கிச் சுடுதலில் ககன் நரங் மற்றும் மல்யுத்தத்தில் யோகேஷ்வர் தத் ஆகியோர் வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை இந்தியா வென்றது. ஆனால், அடுத்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கமும், மல்யுத்தத்தில் சாக்‌ஷி மாலிக் வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்நிலையில் வரும் டோக்கியோ ஒலிம்பிக்கிலாவது இந்திய பதக்க வேட்டை நடத்த வேண்டும் என வாழ்த்துவோம்.