நேரடியாகப் பேச திராணியற்ற கோழைகள், முதுகெலும்பற்றவர்கள் தான் ஷமியை விமர்சிப்பார்கள்: விராட் கோலி 

முகமது சமியை விமர்சனம் செய்பவர்கள் முதுகெலும்பற்றவர்கள், நேரடியாகப் பேச திராணியற்ற கோழைகள் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நேரடியாகப் பேச திராணியற்ற கோழைகள், முதுகெலும்பற்றவர்கள் தான் ஷமியை விமர்சிப்பார்கள்: விராட் கோலி 

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 10 விக்கெட்டுகளில் தோற்ற டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில் ஷமி 43 ரன்களைக் கொடுத்தார், ஆனால் தோல்விக்கு இவர்தான் காரணம் என சமூக ஊடகங்களில் சிலர் அவர் மீது அவர் சார்ந்த மதத்தைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் சமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி களத்தில் நாங்கள் ஆடுவதற்கு நல்ல காரணங்கள் உள்ளன, ஆனால் சோஷியல் மீடியா முதுகெலும்பற்ற சிலர், எந்த ஒருவருடனும் நேரில் பேச திராணியற்ற கோழைகள் தங்கள் அடையாளத்தின் பின்னணியில் பதுங்கிக் கொண்டு வீரர்களை சோஷியல் மீடியாவில் இருந்து  கொண்டு இழிவுபடுத்துவதாக கூறினார்.


இன்றைய உலகில் இது ஒரு கேளிக்கையாகவும் வேடிக்கையாகவும் வாடிக்கையாகி வருகிறது. இது பார்க்க மிகுந்த வேதனையளிக்கிறது, என்னைப்பொறுத்தவரை ஒருவர் சார்ந்த மதத்தை வைத்து அவரை அவதூறு செய்வது இழிவுபடுத்துவது மிகவும் இழிவான செயலாக நான் பார்க்கிறேன் என வேதனை தெரிவித்தார். அனைவருக்கும் கருத்து கூற உரிமை உண்டு, ஆனால் மதரீதியாக தாக்குவது தவறு, எனக்கெல்லாம் மத ரீதியான பாகுபாடு என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, மதம் என்பது ஒவ்வொருவருக்கும் அந்தரங்க புனிதம், புனித அந்தரங்கம் அதை அந்த இடத்திலேயே விட்டு விட வேண்டும். மக்கள் வெறுப்பைக் காட்டக் காரணம், நாங்கள் தனி மனிதர்களாக என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற புரிதல் இல்லாமையால்தான்.

 ஷமி இந்தியாவுக்கு எண்ணிடலங்கா வெற்றிகளை கடந்த சில ஆண்டுகளாகப்பெற்றுத் தந்தது பற்றி அவர்களுக்கு புரியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரும் பும்ராவும் தாக்க பவுலர்கள். இதைப் புரிந்து கொள்ளாத மனிதர்களிடத்தில் நான் ஒரு நிமிடம் கூட என் சிந்தனையை விரயம் செய்ய விரும்பவில்லை ஷமியும் சரி யாரும் சரி இதற்கெல்லாம் மதிப்பு கொடுக்கப்போவதில்லை.  ஷமி பின்னால் இருக்கிறோம், 200% அவருக்கு ஆதரவு அளிக்கிறோம். அவரைத் தாக்குபவர்கள் வேண்டுமென்றால் இதை விடவும் அதிக தீவிரத்துடன் வந்து பாருங்கள். அணிக்குள் எங்கள் சகோதரத்துவத்தை யாரும் அழிக்க முடியாது. அசைக்க முடியாது. நாங்கள் உருவாக்கிய ஒரு பண்பாடு அணிக்குள் இந்த விவகாரங்கள் 0.0001% கூட நுழைய இடமில்லை. இது 100% உத்தரவாதம் என தெரிவித்தார். கோலியின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.