உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: மழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

தொடர் மழை காரணமாக இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டி: மழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஏற்கெனவே முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களால் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதையடுத்து, தொடர் விக்கெட்டுகள் சரிய மொத்தம் 217 ரன்களுக்குத் முதல் இன்னிங்ஸை இந்திய அணி நிறைவு செய்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்திருந்தது.

ஆட்டம் நடந்த இரண்டு நாட்களுமே போதிய வெளிச்சம் இல்லாததாலும், மழையாலும் ஆட்டம் தடைப்பட்டு வந்தது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை என நேரம் கடந்துகொண்டே சென்ற போதிலும் மழை நிற்கவில்லை. இதையடுத்து, 4ஆம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.