சாஹலுக்கு பதில் அஸ்வின் மாற்றப்படுவாரா? தோல்வியிலிருந்து மீளுமா இந்திய அணி?

இன்று இரவு 7.30 மணிக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20..!

சாஹலுக்கு பதில் அஸ்வின் மாற்றப்படுவாரா? தோல்வியிலிருந்து மீளுமா இந்திய அணி?

இந்தியா-ஆஸ்திரேலியா:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில், இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

2-வது போட்டி இன்று:

இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2வது டி-20 போட்டி, நாக்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடையும் பட்சத்தில், தொடரை இழக்க நேரிடும் என்பதால், நிச்சயம் வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 

சாஹலுக்கு பதில் அஸ்வின்:

இதனால் ஆடும் லெவனில் சில மாற்றங்களை செய்ய இந்திய அணி முடிவு செய்துள்ளது. அதன்படி, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு பதிலாக பும்ரா அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் மோசமாக பந்துவீசிய சாஹலுக்கு பதில், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

யாருக்கு வெற்றி?

அதேநேரம் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி தயாராகி வருகிறது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.