எதற்காக ஏற்றப்படுகிறது ஒலிம்பிக் தீபம்.? இதன் பின்னணி தான் என்ன.?

எதற்காக ஏற்றப்படுகிறது ஒலிம்பிக் தீபம்.? இதன் பின்னணி தான் என்ன.?

உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று ஒலிம்பிக் தீபம். பழங்கால மற்றும் நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடர்பை உணர்த்தும் ஒலிம்பிக் ஜோதியின் வரலாறு தான் என்ன? 

உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சமாக ஒலிம்பிக் தீபம் விளங்குகிறது. ஒலிம்பிக் தொடங்குவதில் இருந்து போட்டி காலம் முழுவதும் இரவு, பகல் எந்நேரமும் பிரகாசமாகவும், கம்பீரமாகவும் ஒளிரும் இந்த ஒலிம்பிக் தீபம், நிறைவு விழாவின் போது அணைக்கப்படுகிறது. 

விளையாட்டு வீரர்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் இந்த ஒலிம்பிக் தீபச்சுடர், ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படுவது வழக்கம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைக்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது, குழியாடியின் மையத்தில் சூரிய ஒளி விழும்படி செய்து, அதனால் உண்டாகும் வெப்பத்தைக் கொண்டே ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது. இன்றுவரை அதே முறையிலேயே ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுவதால், பழங்கால மற்றும் நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடர்பை உணர்த்தும் ஒரு தனிச்சிறப்பு இந்த ஒலிம்பிக் ஜோதிக்கு உள்ளது.

ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றாலும், கிரேக்கத்தின் தென் பகுதி நகரான ஒலிம்பியாவில் பாரம்பரிய முறையில், நடனம், நாடகம் போன்ற கலைவிழாக்கள் நடத்தி இச்சுடர் ஏற்றப்படும். அப்போது நீளமான உடையணிந்த வீராங்கனை ஒருவர், ஒளிக்கான கிரேக்கக் கடவுள் அபோலோவிடம் பிரார்த்தனை செய்த பிறகு, நிலத்தில் மண்டியிட்டு சூரிய ஒளியால் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவார்.  

முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி 1896ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்றது என்றாலும் கூட, 1928ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இருந்து தான் இந்த ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நடைமுறை மீண்டும் வழக்கத்திற்கு வந்தது. ஆனால், அப்போது ஒலிம்பிக் தீப ஓட்டம் எல்லாம் கிடையாது. 

போட்டி தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே கிரீஸில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, பல நாடுகளில் பயணித்து, இறுதியாகப் போட்டி தொடங்கும் நாளன்று, போட்டி நடத்தும் நாட்டின் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களால், ஒலிம்பிக் அரங்கைச் சுற்றி வலமாக எடுத்து செல்லப்பட்டு, பின்னர் அரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் கொப்பரையில், மிகவும் பிரபலமான வீரர் ஒருவர் ஒலிம்பிக் சுடரை ஏற்றும் நடைமுறை, 1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ஒலிம்பிக் அமைப்பு குழுத் தலைவராக இருந்த காரல் டீம் என்பவர் தான் இந்த ஒலிம்பிக் தீப ஓட்டத்திற்கு மூளையாக இருந்தார். 

1936ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டாலும், விளையாட்டு அரங்கில் மட்டுமே ஏற்றப்பட்டது. பின்னர் 1964ஆம் ஆண்டில் இருந்து குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போதும் ஒலிம்பியாவில் தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது.