" மசாஜ் செய்துவிடும்படி துன்புறுத்தினார்கள்..." இந்திய தடகள வீராங்கனை டியூட்டி சந்த் மனம் திறந்து பேச்சு...!

" மசாஜ் செய்துவிடும்படி துன்புறுத்தினார்கள்..." இந்திய தடகள வீராங்கனை டியூட்டி சந்த் மனம் திறந்து பேச்சு...!

ஒரிசாவை சேர்ந்த ருச்சிகா மோஹன்ட்டி என்ற மாணவி, தனது சீனியர் மாணவிகள் மனரீதியாக துன்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டார். இந்த செயலை தொடர்ந்து இந்திய தடகள வீராங்கனை டியூட்டீ சந்த், விளையாட்டு விடுதியில் தனக்கு நடந்த மனரீதியான துன்புறுத்தல்கள் குறித்து கூறியுள்ளார். 

புவனேஸ்வரில் பிஜேபி தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. அந்த கல்லூரியை சேர்ந்த பிளஸ் 3 முதலாம் ஆண்டு வரலாறு படிக்கும் மாணவியான ருசிக்கா மோஹன்ட்டி கடந்த ஜூலை 2 ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதுகுறித்து போலீசார் விசாரித்ததில், அந்த மாணவி, தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், " எனது சீனியர் மாணவிகளான 3 பேர், மனரீதியாக துன்புறுத்துவதால், என் வாழ்வை முடித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். அந்த மாணவிகள் கொடுத்த அழுத்தத்திலேயே, ருச்சிகா இப்படி ஒரு முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இது குறித்து ருச்சிகாவின் தந்தை கணேஸ்வர் மோஹன்ட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், "என் மகள் தற்போது உயிருடன் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. மேலும் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை" என கலங்கியபடி பேசி இருந்தார். 

இது குறித்து புவனேஸ்வர் டிசிபி பிரதீக் சிங் கூறுகையில், " அந்த மாணவி குறித்து விசாரித்ததில், சக மாணவிகள் விடுதியின் கதவை தட்டி பார்த்துள்ளனர், அந்த மாணவி பதிலளிக்கவில்லை. பின்னர் போலீசார் சென்று பார்க்கையில், தூக்கில் தொங்கியபடி அவளது அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். மேலும் நாங்கள், இதனை சந்தேகத்திற்கிடமான மரணம் என வழக்கு பதித்து விசாரணை நடத்தி வருகிறோம். "  என குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் இந்திய தடகள வீராங்கனை டியூட்டீ சந்த், விளையாட்டு விடுதியில், இதேபோன்று தனக்கு நடந்த பிரச்சனை குறித்து, தான் விளையாட்டு விடுதிகளில் தங்கி இருந்த போது, தன்னுடைய சீனியர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானது பற்றி கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பாக பேஸ்புக் பயணர் ஒருவர், கல்வி நிலையங்களில் நடக்கும் ராக்கிங் பற்றிய ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த டியூட்டீ, "என் விளையாட்டு விடுதியில், எனது சீனியர்கள் அவர்களுக்கு மசாஜ் செய்து விடும்படி என்னை தொந்தரவு செய்தனர். மேலும், அவர்களது துணிகளையும் துவைத்து தரும்படி வற்புறுத்தினர். நான் அதை மறுக்கும் பட்சத்தில் என்னை மேலும் துன்புறுத்தினர்." என கூறியுள்ளார். இது போன்ற செயலால், ஜூலையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய தொடர் அணியில் இடம்பிடித்த தனக்கு, மனநலத்தைப் பாதித்திருக்கிறது. மேலும்  விளையாட்டில் கவனம் செலுத்துவது கடினமாகிவிட்டது என்று கூறினார். அதோடு, "இது போன்ற துன்புறுத்தலை தாங்கி கொண்டிருப்பவர்கள், விடுதியில் தங்குகிறார்கள்; பலர் கைவிட்டு, வீடு திரும்புகின்றனர். இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என டியூட்டீ கூறியுள்ளார்.