கோடிக்கணக்கானோரின் கண்ணீருக்கு காரணமான ஒற்றைக் கண்ணீர்..! எங்கும் மெஸ்ஸி, எதிலும் மெஸ்ஸி.!  

கோடிக்கணக்கானோரின் கண்ணீருக்கு காரணமான ஒற்றைக் கண்ணீர்..! எங்கும் மெஸ்ஸி, எதிலும் மெஸ்ஸி.!  

இந்த தலைமுறையில் சிறந்த கால்பந்து வீரர்கள் யார்? என்றால் அனைவரும் சொல்வது மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ என்றுதான் . இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்றாலும் அதிக கோல் அடித்தவர், அதிக கோல் அடிக்க உதவி செய்தவர், அதிக கோப்பைகளை வென்றவர், அதிக முறை கோல்டன் பந்து விருதை வென்றவர், அதிக முறை 'பாலன் டி ஆர்' விருதை வென்றவர் என்று இந்த போட்டியில் ரொனால்டோவை விட முன்னணியில் இருக்கிறார் மெஸ்ஸி. ஆனால் அது எல்லாம் கிளப் போட்டிகளில் மட்டும் தான். 

நாட்டுக்காக ஆடும் சர்வதேச போட்டிகளில் எப்போதும் மெஸ்ஸியை விட முன்னணியில் இருப்பது என்னவோ அது ரொனால்டோ தான். அதன் உச்சகட்டமாக 2018ம் ஆண்டில் நடந்த யூரோ கோப்பையை தனது போர்த்துக்கல் நாட்டுக்கு வென்றுகொடுத்தார் ரொனால்டோ. ஆனால், மெஸ்ஸியின் கதையோ அப்படியே வேறு விதமாக இருக்கிறது. 

தான் ஆடும் பார்சிலோனா அணிக்காக 10 லா லீகா கோப்பை, 8 ஸ்பானிய சூப்பர் கோப்பை, 6 கோபா டெல் ரே கோப்பை, 4 ஐரோப்பிய சாம்பியன் லீக் கோப்பை,3 ஐரோப்பிய சூப்பர் கோப்பை, 3 கிளப் உலக கோப்பை என்று மொத்தமாக 34 கோப்பைகளை வென்றுகொடுத்த மெஸ்ஸியால் தன் நாடான அர்ஜென்டினாவுக்கு ஒரு சர்வதேச கோப்பையை கூட வென்றுகொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக மெஸ்ஸி ஒருபோதும் உலகின் தலைசிறந்த வீரர் இல்லை என்று அவரின் விமர்சகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.

மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்காக கோப்பை தான் வென்றுகொடுக்கவில்லையே தவிர அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர் அவர் தான். மேலும் நடப்பு வீரர்களில் அதிகம் கோல் அடித்தவர் பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்தில இருக்கிறார். 2005ம் ஆண்டில் முதன்முறையாக சீனியர் அணியில் நாட்டுக்காக ஆடஆரம்பித்த மெஸ்ஸி 2006,2010,2014,2018என நான்கு முறை உலககோப்பை கால்பந்து தொடரில் ஆடியுள்ளார்.  

 2014ம் ஆண்டு அர்ஜென்டினா அணி தலைவராக பொறுப்பேற்ற மெஸ்ஸி தனது அணியை இறுதிப்போட்டி வரை கொண்டுசென்றார். இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணியுடன் அர்ஜென்டினா தோல்வியை தழுவிய தருணத்தில் மெஸ்ஸி கண்ணீர் சிந்தியது உலக கால்பந்து ரசிகர்களையே உலுக்கியது. அந்த தொடரின் சிறந்த வீரராக மெஸ்ஸி தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் கோப்பை அவர் வசம் வரவில்லை. 

அடுத்ததாக 2015ம் ஆண்டு கோபா அமெரிக்கா தொடரில் இறுதிப் போட்டி வரை அர்ஜென்டினாவை கொண்டு சென்ற மெஸ்ஸியால் கோப்பையை மட்டும் வெல்லமுடியவில்லை. அந்த தொடரில் 4 முறை  ஆட்டநாயகன் விருதை வென்று சாதனைப் படைத்தார் மெஸ்ஸி. ஆனாலும் அவர் விரும்பிய கோப்பை மட்டும் கையில் கிடைக்கவில்லை.

அடுத்த ஆண்டு நடந்த கோபா அமெரிக்கா தொடரிலும் இறுதிப்போட்டி வரை சென்ற மெஸ்ஸியால் கோப்பையை மட்டும் வெல்லமுடியவில்லை. இறுதிப்போட்டியில் பெனால்டி சூட் அவுட்டில் சிலியிடம் அர்ஜென்டினா தோல்வியை தழுவியது.இந்த தொடரில் வேறு லெவலில் ஆடியிருப்பார் மெஸ்ஸி. 5 கோல் அடித்த மெஸ்ஸி 4 முறை கோல் அடிக்க உதவி செய்திருப்பார். 

இப்படி மூன்று முறையும் இறுதி போட்டிக்கு  அர்ஜென்டினாவை அழைத்து வந்த மெஸ்ஸியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. மேலும் அடுத்து வந்த 2018 உலகக்கோப்பையில் கால் இறுதிக்கு கூட செல்லாமல் அர்ஜென்டினா வெளியேற, அடுத்து வந்த கோபா அமெரிக்கா தொடரிலும் அரையிறுதியில் அர்ஜென்டினா தோல்வியடைந்தது.  இதனால் அர்ஜென்டினா அணியின் துரதிஷ்டசாலியாக பேசப்பட்டார் மெஸ்ஸி. அர்ஜென்டினாவில் கூட மெஸ்ஸிக்கு எதிரான நிலை உருவானது. இது அவரை சங்கடத்தில் ஆழ்த்த அர்ஜென்டினா செல்வதையே குறைத்துக் கொண்டார். 

இந்நிலையில் தான் மெஸ்ஸி அர்ஜென்டினாவை துறந்து, தான் ஆடும் பார்சிலோனா கிளப் இருக்கும் ஸ்பெயின் அணிக்காக  ஆடவேண்டும் என்ற குரல் எழுந்தது. ஆனால் அதை மறுத்த மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்காக கோப்பையை நிச்சயம் வெல்வேன் என்று கூறினார். இந்நிலையில் தான் இந்தாண்டு கோபா அமெரிக்கா போட்டி பிரேசிலில் நடைபெற்றது. 

இதில் லீக் போட்டிகளில் முதல் இடத்தைப் பெற்ற அர்ஜென்டினா அடுத்து வந்த கால் இறுதியில் 3-0 என ஈக்வடார் அணியை வீழ்த்தியது. அரையிறுதியில் பெனால்டி வரை சென்று கொலம்பியாவை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து தனது பரவ வைரியான பிரேசிலை இறுதிப்போட்டியில் இன்று சந்தித்தது. இந்த போட்டியின்  22 நிமிடத்தில் அர்ஜென்டினா சார்பில் டி மரியா கோலடிக்க ஆர்ப்பரித்தார் மெஸ்ஸி. 

அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சிக்க முடிவில் 1-0 என வெற்றிபெற்று கோபா அமெரிக்கா தொடரை அர்ஜென்டினா கைப்பற்றியது. வெற்றிக்கான விசிலை நடுவர் அடிக்க, மைதானத்திலே ஆனந்த கண்ணீர் வடித்தார் மெஸ்ஸி. ஒட்டுமொத்த அர்ஜென்டினா வீரர்களும் மெஸ்ஸியை சுற்றிக்கொண்டு அவரை தூக்கிப் உயர்த்தி தங்கள் நாட்டு சரித்திர நாயகனுக்கு கோப்பையை சமர்பித்தார்கள். 

எப்படி 2011ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றபோது சச்சினை தூக்கி இந்திய வீரர்கள் கொண்டாடினார்களோ அப்படி தான் இருந்தது அந்த காட்சி. இந்த கோபா தொடரில் மெஸ்ஸி ஆடிய ஆட்டம் வேறு ரகம் தான். பொதுவாக ஒரு தொடரில் ஒரு வீரர் அதிக கோல் அடித்து இருப்பார், அல்லது கோல் அடிக்க உதவி செய்திருப்பார். ஆனால் இந்த தொடரில் அதிக கோல் அடித்தவரும் அவர் தான், அதிக கோல் அடிக்க உதவியவரும் அவர் தான். 

இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் இந்த தொடரில் அர்ஜென்டினா அடித்த 12 கோலில் 10 கோல் அடிக்க மெஸ்ஸி என்ற ஒருவரே காரணமாகி இருக்கிறார். அதாவது எங்கும் மெஸ்ஸி,எதிலும் மெஸ்ஸி என்று தான் இந்த தொடரில் சுழன்றார். அதன் முடிவாக  கோபா அமெரிக்கா கோப்பையை கையில் ஏந்திய தருணத்தில் உலகெங்கும் இருக்கிற கோடிக்கணக்கான மெஸ்ஸி ரசிகர்கள் நிச்சயம் கண்ணீர் வடித்திருப்பார்கள். மெஸ்ஸியின் சோக கண்ணீர்களைப் பார்த்து இது வரை கண் கலங்கியவர்கள் அவரின் ஆனந்த கண்ணீரை கண்டு எத்தனை மகிழ்ந்திருப்பார்கள்!