முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி... இந்திய அணி அபார வெற்றி...

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி... இந்திய அணி அபார வெற்றி...

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் போட்டி, ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்தில் 70 ரன்களும், 3-வது வீரராக களம் இறங்கிய சாப்மேன் 63 ரன்களும் விளாசினர். இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தீபக் சாஹர், முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் கே. எல். ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அபாரமாக விளையாடிய சூர்யகுமார், 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா எளிதில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால் அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து இந்தியா அணி  வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி 1 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.