பாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரேநாளில் 11 பதக்கங்களை வென்றது இந்தியா!

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா ஓரேநாளில் 5 தங்கம் உட்பட 11 பதக்கங்களை வென்றுள்ளது.

சீனாவின் ஹாங்சோ நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆசிய பாரா போட்டிகள் தொடங்கியது. அக்டோபர் 28-ஆம் தேதி வரை 17 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில், இந்தியாவிலிருந்து 303 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

இந்த விளையாட்டு போட்டியில், ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் -டி11 பிரிவு ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அங்கூர் தாமா தங்கப் பதக்கத்தை வென்றார். ஆடவர் கிளப் த்ரோ-எஃப்51 இறுதிப் போட்டியில் இந்திய தடகள வீரர்கள் மூன்று பதக்கங்களை வென்றனர். சூர்மா 30.01 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கததை கைப்பற்றினார். இதேபோல் தரம்பீர், அமித் குமார் 2-வது மற்றும் 3-வது இடங்களைப் பிடித்தனர்

ஆடவர் உயரம் தாண்டுதலில் கைலேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதே பிரிவில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், ராம்சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்ட் SH1 இறுதிப் போட்டியில் அவனி லெகாரா தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். ஆடவர் ஜுடோ 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கபில் பர்மர் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

இதேபோல் மகளிர் 44 - 47 கிலோ எடைப்பிரிவிலான டேக்வாண்டோ போட்டியில் இந்திய வீராங்கனை அருணா தன்வார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

மகளிருக்கான படகுப்போட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இதுவரை இந்தியா 6 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் வென்று 17 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.