44வது செஸ் ஒலிம்பியாட் : அமெரிக்காவை வாஷ் அவுட் செய்த இந்திய பி  அணி !!

சென்னை மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 8-வது சுற்றில் இந்திய B அணி அமெரிக்காவை வாஷ் அவுட் செய்தது. 

44வது செஸ் ஒலிம்பியாட் : அமெரிக்காவை வாஷ் அவுட் செய்த இந்திய பி  அணி !!

44-வது சர்வதேச செஸ் ஒலிம் பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. அதன் 8-வது சுற்று நேற்று தொடங்கியது. அதில் இந்திய ஓபன் பிரிவின் A அணி, அர்மேனியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தில் இந்திய வீரர்கள் விதித் குஜராத்தி அர்மேனிய வீரருடன் டிராவில் முடித்தார்.

அதேபோல் அர்ஜூன் எரிகேசியும், நாராயணனும் தமது ஆட்டத்தை டிராவில் முடித்தனர். மற்றொரு வீரரான ஹரிகிருஷ்ணா, அர்மேனியாவின் சர்ஹிசியன் கேப்ரியலுடன் மோதிய விளையாட்டில் தோல்வி அடைந்ததால் இந்திய அணி வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. 

இதற்கிடையில், அமெரிக்காவை எதிர்கொண்ட இந்தியாவின் B அணியின் பிரக்ஞானந்தா சோ வெஸ்லியை வீழ்த்தி வெற்றி பெற்றார். அதேபோல் அரோனியன் லெவன் என்ற அமெரிக்க வீரரை எதிர்கொண்ட சரின் நிஹாலும் வெற்றி பெற்றார். தொடர் தொடங்கியதில் இருந்து ஏறுமுகம் காட்டிவரும் தமிழக வீரர் குகேஷ், அமெரிக்க வீரர் கருவானா ஃபே பியானோவை வீழ்த்தி அசைக்க முடியாத வீரராக வலம் வருகிறார். 

மற்றொரு வீரரான ரோனக் சத்வானியும் டொமிங்குவேஸ் பெரெஸ் லீனியர் என்ற வீரரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்க அணியை இந்தியா மொத்தமாக வாஷ் அவுட் செய்தது.

இந்திய ஓபன் C அணி ஒன்றுக்கு மூன்று என்ற புள்ளி கணக்கில் பெரு அணியுடன் தோல்வி அடைந்தது.  பெரு வீரர் கோர்டோவா எமிலோவை எதிர்கொண்ட அணியின் சேகர் கங்குலி தோல்வி அடைந்தார். மற்றொரு வீரரான அ பிஜீத் குப்தாவும் பெரு வீரர் டெர்ரி ரொனால்டோவிடம் தோல்வியைத் தழுவினார். எஸ். பி.சேதுராமன், மற்றும் முரளி கார்த்திகேயன் ஆகியோர் பெரு வீரர்களுடனான தங்கள் ஆட்டங்களில் டிரா செய்தனர். 

பெண்கள் பிரிவில் A அணி, பலம் வாய்ந்த உக்ரைனை சந்தித்தது. விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா - உக்ரைன் டிராவில் முடிந்தது.  பெண்கள் A அணியின் கோனேரு ஹம் பி, முசைசுக் மரியாவை எதிர்கொண்ட ஆட்டம் டிராவில் முடிந்தது. அதேபோல் முசைசுக் அன்னாவை எதிர்கொண்ட ஹரிகா துரோணவள்ளியும் டிராவில் முடித்தார்.

அடுத்தடுத்த வீராங்கனைகளான தானியா சச்தேவ், வைஷாலி ஆகியோரும் தங்கள் விளையாட்டுகளை டிராவில் முடித்தனர்.  மகளிர் B அணியின் வந்திகா அகர்வால் குரோஷியா வீராங்கனை மெடிக் மிர்ஜானாவை எதிர்கொண்ட ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 

அதேபோல் பத்மினி ராவத் மற்றும் திவ்யா தேஷ்முக் இருவரும் குரோஷியா வீராங்கனைகளை வீழ்த்தி வெற்றி அடைந்தனர்.  ஆனால் ஐவெகோவிக் டிஹானா என்ற வீராங்கனையை எதிர்கொண்ட மேரி ஆன் கோமஸ் டிராவில் முடித்தார். 

மறுபுறம் போலாந்து நாட்டை எதிர்கொண்ட இந்திய மகளிர் C அணியின் வீராங்கனை ஈஷா கர்வாடே, தோல்வியைத் தழுவினார்.  அதேபோல், கொய்பஸா ஒலிவியாவை எதிர்கொண்ட நந்திதாவும் தோல்வி அடைந்தார். 

போலாந்து வீராங்கனை ருதின்ஸ்கா மிகாலினாவுடன் மோதிய விஷ்வா வஸ்னவாலாவும், மலிகா மரியாவை எதிர்கொண்ட பிரத்யுஷாவும் தோல்வி அடைந்ததால் போலாந்திடம் இந்திய அணி சரணடைந்தது. 

செஸ் ஒலிம் பியாட்டின் 9-வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.