டி20 உலகக்கோப்பை: ஒரே பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்...

டி20 உலகக்கோப்பை: ஒரே பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்...

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கொரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

 இந்தப் போட்டியில் பங்குபெறும் அணிகளை டி20 தரவரிசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளது ஐசிசி குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள். அதேபோல குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தச் சுற்றுக்கு சூப்பர் 12 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.

 கடந்த வருடம் டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்தது. அப்போது இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெவ்வேறு பிரிவுகளில் இடம்பெற்றன. அதற்கான காரணம், அப்போதைய தரவரிசையில் இரு அணிகளும் முதல் இரு இடங்களைப் பிடித்திருந்தன.

 இதனால் 2011 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு முதல்முறையாக ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் இரு அணிகளும் லீக் சுற்றில் மோதாத நிலைமை ஏற்பட்டது. ஆனால் கொரோனா சூழல் காரணமாக கடந்த வருடம் டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவில்லை.

 இந்தமுறை மார்ச் 20, 2021 அன்று இருந்த டி20 தரவரிசையின் அடிப்படையில் அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் இரு இடங்களில் இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளும் அதற்கடுத்த இடங்களில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் தரவரிசையில் இடம்பெற்றன. இதன் அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.