நெதர்லாந்து அணியை 44 ரன்களில் சுருட்டியது இலங்கை...

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், நெதர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

நெதர்லாந்து அணியை 44 ரன்களில் சுருட்டியது இலங்கை...

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றன. ஸ்காட்லாந்து, வங்காளதேசம், இலங்கை, நமீபியா ஆகிய 4 அணிகள், சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. இந்நிலையில், சார்ஜாவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற இலங்கை அணி, பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் 10 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த நெதர்லாந்து அணி, 44 ரன்கள் மட்டுமே எடுத்தது.

45 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில், தொடக்க ஆட்டக்காரர் நிசாங்கா ரன் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்த குசால் பெரேரா, 33 ரன்கள் எடுத்து இறுதிவரை நிலைத்து நின்று ஆடினார். இதனால் 7 புள்ளி 1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்து, இலங்கை அணி சுலபமாக வெற்றி பெற்றது.