டென்னிஸில் இருந்து ஓய்வு பெறும் செரீனா..கடைசி போட்டியில் வெல்வாரா?

குடும்பத்துடன் நேரத்தை செலவிட இருப்பதாக தனது ஓய்வு குறித்த செய்தியில் செரீனா தகவல்..!

டென்னிஸில் இருந்து ஓய்வு பெறும் செரீனா..கடைசி போட்டியில் வெல்வாரா?

23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உலகின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக இருந்து வரும் செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 

வில்லியம்ஸ் சகோதரிகள்: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் செரீனா வில்லியம்ஸ். 1999-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம் உலக மக்களை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இவர் மட்டுமில்லாது இவரது சகோதரியும் டென்னிஸ் வீராங்கனை ஆவார். இவர்கள் இருவரும் சேர்ந்து சர்வதேச அரங்கில் தங்களுக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளனர். 

39 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்: அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், ஒற்றையர் பிரிவில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், கலப்பு இரட்டையர் பிரிவில் 2  கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றவர். 

319 வாரங்கள் முதல் இடம்: இதுதவிர மகளிர் WTA 73 ஒற்றையர் பட்டங்களையும், 23 இரட்டையர் பிரிவு பட்டங்களுடன் சேர்த்து 4 முறை ஒலிம்பிக் பதக்கத்தையும் வென்று அசத்தியவர். 40 வயதாகும் செரீனா தனது டென்னிஸ் வாழ்க்கையில் 319வாரங்கள் சர்வதேச வீராங்கனை பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தவர். 

2017-க்கு பிறகு வெற்றி இல்லை: கடைசியாக இவர் 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, வேறு எந்த ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்லவில்லை. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் கூட முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சியளித்தார். 

ஓய்வு அறிவிப்பு: எதிர்வரும் அமெரிக்க ஓபன் தொடரில் களமிறங்கவுள்ள செரீனா, அதன் பிறகு டென்னிஸ்ஸில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

குடும்பத்திற்காக நாட்களை செலவழிக்க திட்டம்: வாழ்க்கையில் அனைவருக்கும் எப்போதாவது வேறு திசையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும், அதுவும் நமக்கு பிடித்தமான ஒன்றை விட்டு விலக வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்ட செரீனா வில்லியம்ஸ், தற்போது டென்னிஸை விட்டு விலகிதான் ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார். இனி தனது குடும்பத்திற்காக நாட்களை செலவழிக்க விரும்புவதாக அவர் 
தெரிவித்துள்ளார்.