சிஎஸ்கேவை வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்..! ரன்மழை பொழிந்த ஷிவம் டுபே..!

சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்த ராஜஸ்தான் வீரர்கள்..!

சிஎஸ்கேவை வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்..! ரன்மழை பொழிந்த ஷிவம் டுபே..!

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் ஆட்டம், அபுதாபியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், வழக்கம் போல ருதுராஜ் கெய்க்வாட், டூ பிளிஸ்சிஸ் ஆகியோர் அதிரடியை வெளிப்படுத்தினர். இருப்பினும் டூ பிளிஸ்சிஸ் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 3 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த மொயீன் அலி 21 ரன்னிலும், அம்பத்தி ராயுடு 2 ரன்னிலும் வெளியேறினர். 

மறுபுறம் ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் வாணவேடிக்கை நிகழ்த்திய ஜடேஜா, ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் சேர்த்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான லீவிஸ், ஜெய்ஷ்வால் ஆகியோர், சென்னை அணியினரின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர். லீவிஸ் 27 ரன்களிலும், ஜெய்ஷ்வால் அரைசதத்துடனும் வெளியேற, அடுத்து வந்த சஞ்சு சாம்சன் - ஷிவம் டுபே ஜோடியும், சென்னை அணியினரின் பந்து வீச்சை தெறிக்க விட்டது. சஞ்சு சாம்சன் 28 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த பிலிப்ஸ், ஆட்டமிழக்காமல் 14 ரன்கள் எடுத்தார். கடைசி வரை நிலைத்து ஆடிய ஷிவம் டுபே, ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் குவித்தார். இதனால் ராஜஸ்தான் அணி, 17 புள்ளி 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இதனால் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது என்பதால், இந்த தோல்வி எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும் ராஜஸ்தான் அணியின் வெற்றி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளது.