உலக கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்… ஒரு விக்கெட் கூட இழக்காமல் வெற்றி பெற்று அதிரடி

ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

உலக கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்… ஒரு விக்கெட் கூட இழக்காமல் வெற்றி பெற்று அதிரடி

7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றில், இந்திய அணி தமது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தியது. துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்கத்தில் சற்று தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுக்க, கே.எல்.ராகுல் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் கேப்டன் விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் நிதானமாக ஆடினர். ரிஷப் பண்ட் 39 ரன்னில் வெளியேற, நங்கூரம் போல் நின்று ஆடிய விராட் கோலி 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் யாரும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் இருவரும், அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகள் என விளாசி, இருவரும் அரை சதமடித்தனர். இந்திய அணியின் பந்து வீச்சாளர்களால் எவ்வளவு முயன்றும், ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியவில்லை. இதனால் 17 புள்ளி 5 ஓவரில் பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதே இல்லை. ஆனால் பாகிஸ்தான் அணியின் இந்த வெற்றியின் மூலம் அந்த வரலாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வி அடைந்ததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். போட்டி முடிந்ததும் மைதானத்தை விட்டு வெளியேறிய இந்திய ரசிகர்கள், சோக முகத்துடன் காணப்பட்டனர். இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவர்கள், பாகிஸ்தானிடம் இந்திய கிரிக்கெட் அணி தோற்ற விதம் ஏமாற்றத்தை தருவதாக கூறியுள்ளனர்.