டோக்கியோ பாரலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...

டோக்கியோ பாரலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரமோத் பாதக் தங்கம் வென்று அசத்தினார்.

டோக்கியோ பாரலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...

அரையிறுதியில் ஜப்பானின்  டைசூகே புஜிஹராவை வென்ற அவர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் டேனியல் பெத்தேலை எதிர்கொண்டார். போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த பிரமோத் பாகத் 21க்கு 14, 21க்கு 17 என்ற நேர் செட்டுகளில் பெத்தேலை வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்

தங்கம் வென்ற பிரமோத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனது 5 வயதில் போலியோவால் கால்கள் செயல் இழந்த பகத் சர்வதேச  அளவில் முன்னணி பேட்மிண்டன் வீரராக உள்ளார். இதுவரை 45க்கும் மேற்பட்ட சர்வதேச பதக்கங்களை வென்றுள்ள அவர், 2018ல் நடைபெற்ற ஆசியா பாராலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்றுள்ளார்.

இதேபோல் SL3 பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் மனோஜ் சர்கார்  வெண்கலப் பதக்கம் வென்றார். ஜப்பானின் டைசூகே புஜிகராவை எதிர்கொண்ட அவர் 22க்கு20, 21க்கு13 என்ற நேர் செட்களில் வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம் டோக்கியோ பாரலிம்பிக்கில் இந்திய அணி 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 25 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.