ஹிட்லரையே மிரள வைத்த ஒலிம்பிக் நாயகன்..! சொந்த நாட்டு மக்களால் அவமானப்படுத்தபட்ட கொடூரம்.!

ஹிட்லரையே மிரள வைத்த ஒலிம்பிக் நாயகன்..! சொந்த நாட்டு மக்களால் அவமானப்படுத்தபட்ட கொடூரம்.!

ஒலிம்பிக், எத்தனையோ சாதனை வீரர்களை, ஜாம்பவான்களை கண்டிருக்கிறது. ஆனால், புகழுக்காகவும், பெருமைக்காகவும் ஒலிம்பிக்கில் வெற்றி பெற துடிப்பவர்களுக்கு மத்தியில், நிறவெறியையும், இனவெறியையும் எதிர்த்து, தன் மக்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதற்காக, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியவர் தான் ஜெஸ்ஸி ஓவன்ஸ். ஹிட்லரையே மிரள வைத்த அந்த கருப்பு வைரம் செய்தது என்ன? 

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது குதிரைக்கொம்பு என்பார்கள். ஆனால், ஒலிம்பிக்கில் ஒரு பதக்கமல்ல, 4 தங்கப்பதக்கங்களை வென்றெடுத்த ஒரு ஒலிம்பிக் சாம்பியன், பின்னாட்களில் வயிற்றுப் பிழைப்புக்காக குதிரையுடன் போட்டிப்போட்டு ஓடினார் என்றால் நம்ப முடிகிறதா..? 1936 பெர்லின் ஒலிம்பிக்கில், 4 தங்கப்பதக்கம் வென்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த, அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸ்ஸி ஓவன்ஸ் பின் வறுமையில் வாடியபோது ஒலிம்பிக் சாம்பியனாக இருந்துகொண்டு குதிரைகளோடு போட்டி போடுவது அவமானம் எனக் கூறியவர்களுக்கு, ’தங்கப்பதக்கங்களை சாப்பிட முடியாது, நேர்மையான வழியில் சாப்பிட இது ஒன்று தான் எனக்கு சிறந்த வழி’ என பதிலளித்தார் ஓவன்ஸ். 

1933ஆம் ஆண்டு, அடால்ப் ஹிட்லரின் கீழ் உலகின் சர்வாதிகார நாடாக ஜெர்மனி உருவெடுத்தது. அப்போது உலகின் மற்ற நாடுகள் மத்தியில், ஜெர்மனியால் விளையாட்டு நெறி தவறாமல், ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. இதனால் நிற, இன பேதமின்றி போட்டியை நடத்துமாறும், கறுப்பின வீரர்களின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் ஜெர்மனியிடம் பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி ஒப்பந்தம் போட்ட பின்னரே, 1936ஆம் ஆண்டு பெர்லினில் ஒலிம்பிக் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், யூதர்களும், கருப்பினத்தவர்களும் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார், ஹிட்லர். விளையாட்டில் இனவெறிச் சாயம் பூசக்கூடாது என்று பல நாடுகள் போர்க்கொடி தூக்கியதால், அரைகுறை மனதுடன் பின்வாங்கினார். ஆனாலும் அவரது எண்ணமும், செயலும் மாறவில்லை.

ஆரிய மக்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது ஹிட்லரின் ஆசை. அவரது ஆசையை தூள்தூளாக்கும் வகையில், 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4x100 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் மற்றும் நீளம் தாண்டுதல் என்று 4 தங்கப்பதக்கங்களை அள்ளிக்குவித்த, 23 வயதான கறுப்பின இளைஞர் ஜெஸ்ஸி ஓவன்ஸ், அந்த ஒலிம்பிக்கின் சரித்திர ஹீரோவாக ஜொலித்தார். ஆனால், தங்கப்பதக்கம் வென்ற ஜெஸ்ஸி ஓவன்சுடன், கை குலுக்க மறுத்துவிட்டார் ஹிட்லர். முந்தைய நாள் ஜெர்மனி வெற்றியாளர்களுடன் உற்சாகமாக கைகுலுக்கிய ஹிட்லர், மறுநாள் திட்டமிட்டே, மைதானத்தை விட்டு முன்கூட்டியே சென்று விட்டதாக குற்றச்சாட்டும்  கிளம்பியது. 

இதனையடுத்து ஒரே ஒலிம்பிக் போட்டியில், தடகளத்தில் 4 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையுடன் நாடு திரும்பிய ஜெஸ்ஸி ஓவன்சுக்கு அங்கு அதிர்ச்சியே காத்திருந்தது. நிற வெறியின் காரணமாக, அந்த ஒலிம்பிக் சாம்பியனுக்கு அரசு உதவியோ அல்லது தனியார் உதவியோ பெரிய அளவில் கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன் அன்றைய அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்ட், ஓவன்சுக்கு வாழ்த்து கூட சொல்லவில்லை. எனவேதான், 'ஹிட்லரை விட தன்னை பெரிதும் அவமதித்தது அமெரிக்க ஜனாதிபதி ப்ராங்ளின் ரூஸ்வெல்ட் தான் என்றும், அத்தனை தங்கப் பதக்கம் வென்றும், அதிபர் தன்னை வரவேற்று பாராட்டு தெரிவிக்கவில்லை என்பதுதான் மன வருத்தத்தை அளித்தது என்றும் கூறிய ஜெஸ்ஸி ஓவன்ஸ், பின்னாட்களில் வறுமையின் காரணமாக கால்பந்து போட்டிகளுக்கு நடுவே, குதிரை, மோட்டார் சைக்கிள், நாய்களுடன் ஆடுகளத்தில் போட்டிப்போட்டு ஓடினார். அதில் கிடைத்த சொற்ப காசுதான் அவரது குடும்பத்தை காப்பாற்றியது என்றால் நம்பமுடிகிறதா?