”உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு வீரர்கள் இல்லை” - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு வீரர்கள் இல்லை என்பது வருத்தம் தான். இருந்தாலும் எதிர்காலத்தில் தமிழ்நாடு வீரர்கள் விளையாடுவதற்கான வகையில் வளர்ச்சியடைவோம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வெற்றிக் கோப்பை சுற்றுப்பயணம் கடந்த சில மாதங்களுக்கு முன் விண்வெளியில் இருந்து தொடங்கி, பல்வேறு நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, நாடு திரும்பியுள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு எடுத்து வரப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டது!

12 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளதை சிறப்பிக்கும் விதத்தில், "நம்ம சென்னை" யில் ஐசிசி உலகக் கோப்பை என்ற நிகழ்வில் உலகக் கோப்பை காட்சி படுத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வளாகத்தில் இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, துணை செயலாளர் பாபா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி கூறியதாவது:-

” உலக கோப்பை நம்ம சென்னைக்கு வந்திருக்கிறது. இது மிகப்பெரிய நிகழ்வு. 2011 உலகக் கோப்பை போட்டிகள் இங்கே நடந்து முடிந்தது.

தோனியின் 2011 சிக்சர் பசுமையான நிகழ்வாக இருக்கிறது. முதல் போட்டியே சென்னையில், இந்தியா ஆஸி அணிகளுக்கு நடைபெறவுள்ளது.

வீரர்களின் சவுகரியத்திற்காக முக்கிய ஏற்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளது. இங்கு இருக்கக் கூடிய பெவிலியின் வேறு எங்கும் இல்லை என ஏற்கனவே பலர் கூறுவது நாம் அறிந்த ஒன்றே.

தமிழ்நாடு வீரர்கள் இல்லை என்பது வருத்தம் தான். இருந்தாலும் எதிர்காலத்தில் தமிழ்நாடு வீரர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வகையில் வளர்ச்சி செய்யப்படும்.  

மழையால் போட்டிகள் பாதிக்கப்பட்டால் சூப்பர் சாபர் மற்றும் மைதானம் முழுவதும் மழை காலத்தை எதிர்கொள்ள தக்க உபகரணங்களுடன் தயாராக இருக்கிறோம்.

பாகிஸ்தான் அணி இங்கே விளையாடவில்லை என்பதை தாண்டி, ஆஸ்திரேலியாவும் நல்ல அணி தான். இந்த ஆட்டமும் சுவாரஸ்யம் குறையாது என நினைக்கிறோம் என்று பேசினார்.

பொதுமக்களின் பார்வைக்காக ஐசிசி உலகக் கோப்பை காட்சி படுத்தப்படவுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வெற்றி கோப்பை, நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், செப்.16 மற்றும் 17-ம் தேதி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”, என அவர் தெரிவித்தார். 

இதையும் படிக்க  | மணல் ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடத்தில் ED ரெய்டு..! ஆவணங்கள் முடக்கம்