6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி... ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது லக்னோ அணி!!

டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில், லக்னோ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி... ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது லக்னோ அணி!!

15வது ஐ.பி.எல் தொடர் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 15வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  அணியும், ரி‌ஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணியில், தொடக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி, 34 பந்துகளில் 61 ரன்களைக் குவித்தார். ஆனால் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னரும், 3வதாக களமிறங்கிய ரோவ்மன் பவலும் பெரிதாக சோபிக்கவில்லை. இறுதியில் ரிஷப் பண்ட் - சர்ப்ராஸ்கான் ஜோடியின் நிதானமான ஆட்டத்தால், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு, குவின்டன் டி காக் - கே.எல்.ராகுல் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ராகுல் 24 ரன்களில் வெளியேறினாலும், மறுபுறம் அதிரடியாக ஆடிய குவின்டன் டி காக் 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இதனால் லக்னோ அணி, 19 புள்ளி 4 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ள லக்னோ, புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.