யூரோ கோப்பை கால்பந்து தொடர்... காலிறுதியில் நுழைந்தன இத்தாலி, டென்மார்க் அணிகள்...

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி மற்றும் டென்மார்க் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

யூரோ கோப்பை கால்பந்து தொடர்... காலிறுதியில் நுழைந்தன இத்தாலி, டென்மார்க் அணிகள்...
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்து விட்டன. இதனையடுத்து, இங்கிலாந்தின் வெம்ப்லியில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் இத்தாலி மற்றும் ஆஸ்திரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காத காரணத்தால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆட்டத்தின் 95-வது நிமிடம் மற்றும் 105-வது நிமிடத்தில் இத்தாலி அணி, தலா ஒரு கோல் அடிக்க, ஆஸ்திரியா அணி 114-வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது. இறுதியில், இத்தாலி அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
 
இதைப்போல நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் டென்மார்க் மற்றும் வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் சக வீரர் டாம்ஸ் கார்டு தட்டிக் கொடுத்த பந்தை, டென்மார்க்கின் கேஸ்பர் டோல்பெர்க் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார். பிற்பாதியில் 48-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் டோல்பெர்க் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
கடைசி கட்டத்தில் டென்மார்க்கின் ஜோகிம் மாலே 88-வது நிமிடத்திலும், பிராத்வெயிட் 90-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். கடைசி வரை போராடியும் வேல்ஸ் அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், டென்மார்க் அணி 4 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வேல்சை பந்தாடி காலிறுதிக்குள் நுழைந்தது.