டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு...

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெற்ற தங்கப் பதக்கம் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது என ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு...
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா முதன்முறையாக 7 பதக்கங்களை வென்று அசத்திய நிலையில், ஜப்பானில் இருந்து தாயகம் திரும்பிய வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈட்டி எரிதலில் இந்தியாவிற்கு முதல்முறையாக தங்கப் பதக்கம் தேடி தந்து சாதனை படைத்த நீரஜ் சோப்ராவின் வருகையை மக்கள் ஆரவாரமுடன் கொண்டாடி, வெற்றி முழக்கங்களை எழுப்பினர். மேலும், விமானநிலையத்தில் பலரும் அவருக்கு பூங்கோத்து கொடுத்து தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
 
இதேபோல் மல்யுத்தத்தில் பதக்கங்களை வென்ற ரவிக்குமார் தஹியா, பஜ்ரங் புனியா, குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற லவ்லினா மற்றும் ஹாக்கி அணி வீரர்கள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது பெண்கள் ஹாக்கி அணியினர் கேக் வெட்டி, தேசிய கீதம் பாடி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து பேசிய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தான் வென்ற தங்கப் பதக்கம் தன்னுடையது அல்ல என்றும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் சொந்தமானது என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உரையாற்றிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பெண்கள் ஹாக்கி அணியினர் பதக்கம் வெல்லாவிட்டாலும், இந்தியர்களின் மனதை வென்று விட்டதாகத் தெரிவித்தார்.