காமன்வெல்த் போட்டி.. பதக்கங்களை குவித்து வரும் இந்திய வீரர்கள்!!

காமன்வெல்த் போட்டி.. பதக்கங்களை குவித்து வரும் இந்திய வீரர்கள்!!

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து அசத்தி வருகின்றனர்.

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற நிகத் ஜரீன்

72 நாடுகளுக்கு இடையிலான 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில், குத்துச்சண்டையில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட உலக சாம்பியனான நிகத் ஜரீன் அயர்லாந்து வீராங்கனையை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா உடனான இறுதிப்போட்டியில் போராடி தோல்வியைத் தழுவிய இந்திய அணிக்கு, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

நடைப்பந்தயம், டேபிள் டென்னிஸில் வெண்கலம்

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் நடைப்பந்தையத்தில் இந்தியாவின் சந்தீப் குமார் 38 நிமிடம் 49 வினாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதேபோல் பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்ட அன்னு ராணி 60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

டேபிள் டென்னிஸில் வெள்ளி வென்ற இந்திய ஜோடி

டேபிள் டென்னிஸ் போட்டியின், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சரத்கமல் – சத்யன் ஜோடி, இங்கிலாந்தின் பால் டிரிங்ஹால் – லியாம் பிச்போர்டு கூட்டணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 11-8, 8-11,3-11,11-7, 4-11 என்ற செட் கணக்கில் போராடித் தோற்றனர். இதன் மூலம் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

55 பதக்கங்களுடன் 5வது இடத்தில் இந்தியா

காமன்வெல்த் பதக்கப்பட்டியலில், 174 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 166 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளன. கனடா மற்றும் நியூசிலாந்து முறையே 3 மற்றும் 4ஆம் இடங்களில் உள்ளன. இதுவரை 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களைப் பெற்றுள்ள இந்தியா, பதக்க பட்டியலில் 5வது இடத்தில் தொடர்கிறது.