ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!

உலகக்கோப்பை கிாிக்கெட் போட்டியில் கேப்டன் ரோகித் சா்மாவின் அதிரடி சதத்தால் ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தோ்வு செய்தது.

அதன்படி ஆட்டத்தை தொடங்கிய அந்த அணி வீரா்களின் பொறுப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்களும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் ஆப்கானிஸ்தான் அணி பவுலா்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனா். தொடா்ந்து ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனா். தொடா்ந்து 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.