ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-ஆவது நாள்...இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்...!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று ஏழாம் நாள் இறுதியில் எட்டு தங்கம் 13 வெள்ளி 13 வெண்கலப் பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது.

எட்டாவது நாளான இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் ரைபிள் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா சுப்பராஜூ வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

தொடர்ந்து, கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியாவின் ரோஹன் போபண்ணாவும், ருதுஜா போஸ்லேவும் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினர். இதன் மூலம் இந்தியா வென்ற தங்கத்தின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க : காயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்...!

தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஆண்கள் நீளம் தாண்டுதல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி, ஜெஸ்வின் ஆல்டிரின் ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதேபோல், ஆடவர்களுக்கான ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அஜய்குமார் சரோஜ், ஜின்சன் ஜான்சன் ஆகியோரும் வெற்றி பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் ஜோதி யார்ராஜ், நித்யா ராம்ராஜ் இறுதிப் போட்டியில் உள்ளனர்.