காமன்வெல்த் போட்டிகள் : பதக்கப்பட்டியலில் 6வது இடத்தில் இந்தியா !!

காமன்வெல்த் தொடரின் 4ம் நாள் போட்டியின்,  ஜூடோ பிரிவில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

காமன்வெல்த் போட்டிகள் : பதக்கப்பட்டியலில் 6வது இடத்தில் இந்தியா !!

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம், இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூயை எதிர்கொண்டார். போட்டியில் பின்தங்கியதால் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்ட அவர், வெள்ளிப்பதக்கம் வென்றார்.

அதேபோல், ஆடவருக்கான ஜூடோ போட்டியின் 66 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் விஜய்குமார் யாதவ் வெண்கல பதக்கத்தை, தன்வசப்படுத்தினார். பளுதூக்கும் போட்டியில், 71 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கல பதக்கம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 93 கிலோ எடை, கிளீன் & ஜெர்க் பிரிவில் 119 கிலோ எடை என மொத்தம் 212 கிலோ எடையை தூக்கினார்.  

இதேபோல், பேட்மிண்டன் கலப்பு பிரிவில், சிங்கப்பூரை எதிர்க்கொண்ட இந்திய அணி 3-0 எனும் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன்மூலம் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியிலும், நைஜீரியாவை 3க்கு பூஜ்யம் எனும் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, இறுதி போட்டிக்கு முன்னேறியது

நேற்றைய தினம், இந்தியாவிற்கு பளுதூக்குதலில் ஒரு பதக்கமும்,  ஜூடோ பிரிவில் இரண்டு பதக்கங்களும் கிடைத்தன. இதன்மூலம் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களுடன், பட்டியலில் இந்தியா 6ம் இடத்தில் உள்ளது. 30 தங்கப் பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.