20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்... ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்... ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா...

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபுதாபியில் நடைபெற்ற 33-வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கம் அமைத்தனர்.

ரோகித் சர்மா 74 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 69 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரிஷாப் பண்ட் மற்றும்  ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி ரன்களை  குவித்தனர் . இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 210  ரன்கள் குவித்தது. ரிஷாப் பண்ட்  27 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 35  ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20  ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 144  ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.