வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்...

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் மிக முக்கியமான ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்...

ஏழாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு  இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இதில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியனான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது லீக்கில் நியூசிலாந்துடன் இன்றிரவு துபாயில் மோதுகிறது. நியூசிலாந்தும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இரு அணிக்குமே இது வாழ்வா-சாவா மோதல் ஆகும். இந்த பிரிவில் பாகிஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் கம்பீரமாக முதலிடம் வகிக்கிறது. 

மற்றொரு அரைஇறுதி வாய்ப்பில் நீடிப்பது யார்? என்பதை தீர்மானிக்கும் வகையில் இன்றைய ஆட்டம் அமைந்துள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்குத் தான் அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். ஏனெனில் இதன் பிறகு மீதமுள்ள 3 ஆட்டங்களில் பலம் குறைந்த ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளைத் தான் இந்தியா, நியூசிலாந்து அணிகள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்த ஆட்டங்களில் இரு அணிகளுமே வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்றைய ஆட்டத்தில் இரு அணி வீரர்களுமே முனைப்புடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.