கடைசி 2 பந்துகளில் சிக்சர் விளாசி ஹாட்ரிக் வெற்றியை தட்டியது குஜராத் அணி!!

பஞ்சாப்புக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், குஜராத் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை சுவைத்தது.

கடைசி 2 பந்துகளில் சிக்சர் விளாசி ஹாட்ரிக் வெற்றியை  தட்டியது குஜராத் அணி!!

15வது ஐ.பி.எல் தொடர் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 16வது லீக் ஆட்டத்தில் மயாங்க் அகர்வால் தலைமையிலான அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் மயங்க் அகர்வால், 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 35 ரன்கள் எடுத்தார். அதிரடி காட்டிய லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 64 ரன்கள் எடுத்ததால், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் ரஷித்கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில், தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் 7 ரன்னில் அவுட்டானார். எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மான் கில் பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய ஷுப்மான் கில் 96 ரன்களில் ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இந்த போட்டியின் மூலம் ஐ.பி.எல்லில் அறிமுகமான இளம் தமிழக வீரர் சாய் சுதர்ஷன், தன் பங்கிற்கு 35 ரன்கள் சேர்த்தார். கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டதால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ராகுல் தேவாட்டியா 2 சிக்சர்களை விளாசி அணியை வெற்றி பெறச்செய்தார்.