ஐ.பி.எல். கிரிக்கெட் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை அணி  

ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை அணி   

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று, துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ரிஷப் பண்ட்-ஹெட்மயர் ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதனிடையே, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா, 60 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. டு பிளசிஸ் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, அடுத்து இறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடினார். 44 பந்துகளில் 63 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழக்க,  ஷர்துல் தாக்குர் ரன் எடுக்காமலும், அம்பதி ராயுடு ஒரு ரன்னிலும் அவுட் ஆகினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும், சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெயிக்வாட், அரை சதமடித்து 70 ரன்னில் வெளியேறினார். மொயீன் அலி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் நொடிக்கு நொடி விறுவிறுப்பு அதிகரித்து கொண்டே இருந்தது.

அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி, சிக்சரோடு தமது ரன்னை பதிவு செய்து, டாம் கரண் வீசிய கடைசி ஓவரை துவம்சம் செய்தார். 19 புள்ளி 4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய சென்னை அணி, 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், ராபின் உத்தப்பா, தல தோனி ஆகிய இருவரும் பழைய ஃபார்மிற்கு திரும்பியது கூடுதலாக மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.