ஐ.பி.எல். - சிறப்பான பேட்டிங் செய்த தோனிக்கு குவியும் பாராட்டுகள்

டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல். ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங் மூலம் சென்னையை வெற்றி பெற செய்த கேப்டன் தோனியை, விராட் கோலி முதல் லோகேஷ் கனகராஜ் வரை பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

ஐ.பி.எல். - சிறப்பான பேட்டிங் செய்த தோனிக்கு குவியும் பாராட்டுகள்

துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில், களமிறங்கிய கேப்டன் தோனி, 1 சிக்ஸர், 3 பவுண்டரி என 6 பந்துகளில்18 ரன்கள் விளாசி, சென்னையின் வெற்றியை உறுதி செய்தார். இதனையடுத்து, சமூக ஊடகங்களில் பலரது பாராட்டு மழையில் அவர் நனைய தொடங்கினார்.

தி கிங் இஸ் பேக் என, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கிரிக்கெட்டில் என்றும் தலைசிறந்த பினிஷர் தோனி என்றும், மீண்டும் ஒருமுறை தம்மை துள்ளிக் குதிக்கச் செய்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

ஓம் ஃபினிஷாய நமஹ! என பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், சென்னை அணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். ருதுராஜ், உத்தப்பா ஆகிய இருவரும் சிறப்பாக ஆடியதாகவும், ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை தோனி காட்டியதாகவும் பாராட்டியுள்ள சேவாக், கடந்த சீசன் தோல்வியில் இருந்து மீண்டு வந்து இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு என்ன ஒரு சண்டை என கூறியுள்ளார்.

ஒரு முறை சிங்கம் என்றால் எப்போதும் சிங்கம் தான் என தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து, தமது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார். 7-வது எண்... அதான்... அதுதான் டுவிட்... என தோனியை பாராட்டி, நடிகர் தனுஷ் தமது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.