143 ரன்கள் விளாசிய ஹர்மன் ப்ரீத்.. திணறிய இங்கிலாந்து.. ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா..!

இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து வீராங்கனைகள்..!

143 ரன்கள் விளாசிய ஹர்மன் ப்ரீத்.. திணறிய இங்கிலாந்து.. ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா..!

இங்கிலாந்து-இந்தியா:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. 

முதலில் பேட்டிங் செய்த இந்தியா:

இதனை தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி, கேன்டர்பரி நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்திய மகளிர் அணி, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் அதிரடி சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 143 ரன்கள் விளாசினார். ஹர்லின் தியோல் 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும் எடுத்தனர்.

334 ரன்கள் இலக்கு:

இதனையடுத்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்துவீச்சால் 44 புள்ளி 2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இந்தியா அபார வெற்றி:

இதன்மூலம், 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, தொடரையும் 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றது. இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், ஹேமலதா 2 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர். இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் லார்ட்சில் நடைபெறவுள்ளது.