யூரோ கோப்பை கால்பந்து... இறுதிப்போட்டியில் இங்கிலாந்து...

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

யூரோ கோப்பை கால்பந்து... இறுதிப்போட்டியில் இங்கிலாந்து...

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று அதிகாலை இங்கிலாந்தின் வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் சமபலம் பொருந்திய இரு அணி வீரர்களும் வரிந்துகட்டிக் கொண்டு நின்றதால், ஆட்டத்தில் அனல் பறந்தது.

ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில், டென்மார்க் வீரர் மைக்கேல் டாம்ஸ்கார்ட் முதல் கோல் அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தார். ஆனால், அடுத்த ஒன்பதாவது நிமிடத்திலேயே இங்கிலாந்து வீரர் புகாயா சகாவின் கோலடிக்கும் முயற்சியை டென்மார்க்கின் கேஜார் தடுக்க முயன்றார். அப்போது கேஜார் சேம் சைடு கோல் போட்டதால் இங்கிலாந்து அணி நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோலடிக்காததால் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில், இரு அணியினரும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். ஆட்டத்தின் 104ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், அசத்தலாக கோலாக்கினார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து.