5 வது முறை பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...மும்பை அணியை சமன் செய்து சாதனை!

5 வது முறை பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...மும்பை அணியை சமன் செய்து சாதனை!

16 ஆவது ஐபிஎல் தொடரின் குஜராத் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.


16வது ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. இதன்பின் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டு, போட்டியை கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் தாமதப்படுத்தியதால் போட்டியின் ஓவர் 15ஆக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கும் 171ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இதையும் படிக்க : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல்காந்தி ஆதரவளிப்பாரா? மாநிலங்களவையில் ஆம் ஆத்மி பெரும்பான்மை வகிக்குமா?

90 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரின் முதல் 4 பந்தையும் மோஹித் சர்மா சிறப்பாக வீசியதால் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக இக்கட்டான நிலையை சென்னை அணி சந்தித்தது.

கடைசி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட ஜடேஜா 5வது பந்தில் ஒரு சிக்ஸரும், கடைசி பந்தில் ஒரு பவுண்டரியும் அடித்து சென்னை அணிக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்று கொடுத்தார். இதன் மூலம் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது. மேலும் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது.