கேப்டன் பதவியில் இருந்து விலக கோலிக்கு 48 மணி நேர கெடு விதித்த பிசிசிஐ: கோலிக்கும் பிசிசிஐ-க்கும் நடந்த வார்த்தை போர்?...

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதில் விராட் கோலிக்கும் பிசிசிஐ-க்கும் கடும் சண்டை நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் பதவியில் இருந்து விலக கோலிக்கு 48 மணி நேர கெடு விதித்த பிசிசிஐ: கோலிக்கும் பிசிசிஐ-க்கும் நடந்த வார்த்தை போர்?...

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. முதலில் டெஸ்ட் தொடருக்கான அணியை மட்டுமே அறிவித்த போதும், ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது ஒருநாள் அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகி, புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டார். எனினும் ஒருநாள் போட்டி அணிகான கேப்டனையும் மாற்ற பிசிசிஐ முடிவு செய்தது. டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு தனி தனி கேப்டன்கள் இருந்தால் தேவையின்றி குழப்பம் வரலாம் என இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி விராட் கோலியிடமும் பதவி விலக கோரப்பட்டது.

இந்நிலையில் விராட் கோலி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. வரும் 2023ம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றுக்கொடுப்பேன். அதுவரை பதவி விலக மாட்டேன் என வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் அதிருப்தியடைந்த பிசிசிஐ அதிகாரிகள், 48 மணி நேரத்திற்குள் நீங்களாக பதவி விலக வேண்டும், அப்படி இல்லையென்றால் பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என கெடு விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 விராட் கோலி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், 49வது மணி நேரத்தில் பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டது. அதில் கோலி பதவி விலகுகிறார் என்றெல்லாம் குறிப்பிடவில்லை. மாறாக " பிசிசிஐ-ன் மூத்த அதிகாரிகள் அனைவரும் ரோகித் சர்மாவை ஒருநாள் அணி கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளோம்" எனக்குறிப்பிட்டிருந்தது. இதன் மூலமே கோலியை பதவியில் இருந்து நீக்கினர் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

விராட் கோலியின் கேப்டன்சி மோசமாக உள்ளது, அணிக்குள் அவரின் செயல்கள் தவறாக உள்ளது என சீனியர் வீரர்கள் சிலர் ஏற்கனவே பிசிசிஐ-க்கு புகார் அளித்திருந்ததாக தகவல் வெளியானது. அதன் பின்னரே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கோலியின் கேப்டன்சியில் இதுவரை இந்திய அணி 95 போட்டிகளில் விளையாடி 65ல் வெற்றி பெற்றுள்ளது. 27 போட்டிகளில் தோல்விகளை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.