பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா...

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரைஇறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா...
Published on
Updated on
1 min read

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 52 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கவீரர் பாபர் அசாம் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய பகர் சமன் 32 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்  என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டேவிட் வார்னருடன் அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்த நிலையில் மார்ஷ் 28 ரன்னில் அவுட்டானார். ஸ்மித் 5 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 7 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய வார்னர் 49 ரன்னில் வெளியேறினார். 

ஆஸ்திரேலியா 96 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து இறங்கிய ஸ்டோய்னிஸ் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடினார். வேட் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்டோய்னிஸ் 40 ரன்னும், வேட் 17பந்தில் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வெல்லாத ஆஸ்திரேலிய அணி, அந்த கனவை முதல்முறையாக எட்டும் முனைப்பில் முன்னேறியுள்ளது. இதன்படி வரும் 14-ந்தேதி நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன், ஆஸ்திரேலியா அணி மோத உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com