ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாற்று சாதனை... 100 பதக்கங்களை தாண்டி அசத்திய இந்தியா...!

ஆசிய விளையாட்டுப் போட்டியில், 100 பதக்கங்களையும் தாண்டி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி, சீனாவின் ஹாங்சோ ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தில் தொடக்க விழாவிடன் பிரம்மாண்டாக தொடங்கியது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சீன பாரம்பரிய கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், இந்தியா சார்பில், 655 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 

தொடக்க விழா அணிவகுப்பில் 8-வது நாடாக வலம் வந்த இந்தியா, ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைய்ன் ஆகியோர் இணைந்து தேசிய கொடியை ஏந்திச் சென்றனர். அவர்களுடன் இந்திய வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து சென்றனர். 

தொடக்க நாளில் இருந்தே இந்தியா பதக்க வேட்டை தொடங்கியது. 

10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீரர்கள் ருத்ரான்க்‌ஷ் பாட்டீல், ஐஸ்வர்ய் பிரதாப் சிங் தோமர், திவ்யன்ஷ் சிங் பன்வார் அடங்கிய குழு தங்கப் பதக்கம் வென்றதுடன், முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது. 

இதேபோன்று, மகளிருக்கான தனிநபர் பிரிவு வில்வித்தை இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா, தங்கப்பதக்கத்தை வென்றார். ஈக்வஸ்டேரியன் என்ற குதிரையேற்ற விளையாட்டின் டிரஸ்ஸாஜ் அணி பிரிவில் இந்திய அணி 41 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கம் வென்று சாதனை படைத்தது. 

டி-20 மகளிர் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது. ஆண்கள் கபடிப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. வில்வித்தையில், மகளிர் குழு பிரிவு மற்றும் கலப்பு அணி பிரிவிலும் தங்கம் வென்றனர். 

ஆசிய விளையாட்டு ஹாக்கி இறுதிப் போட்டியில் 5க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி, இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றதுடன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.  ஈட்டி எறிதலில் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தையும், கிஷோர் குமார் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். 

ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் இந்திய அணியினர் மின்னல் வேகத்தில் சென்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். 400 மீட்டர் மகளிர் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. மகளிர் கபடிப் பேட்டியில், சீன அணியை வென்று, இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ருதுஜா போஸ்லே இணை, சீனாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. 

இதேபோன்று, ஸ்குவாஷ் ஆடவர் பிரிவில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தங்க பதக்கத்தை தட்டிச் சென்றது.  இந்திய ஆடவர் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய  அணி தங்கப்பதக்கம் வென்றது. ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் போட்டியில் இந்திய வீரர்கள்,  சாத்விக் - சிராக் இணை தங்கப் பதக்கம் வென்றனர்.

2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் என 70 பதக்கங்களை வென்றதே இந்தியாவின் சாதனையாக இருந்தது. 

ஆனால், 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 28 தங்கம், 36 வெள்ளி, 41 வெண்கலம் என 105 பதக்கங்களைப் பெற்று இந்தியா 4-வது இடத்தைப் பிடித்து, புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.  இந்தியாவின் இந்த வரலாற்று சாதனைக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இதையும்  படிக்க   |  உலகக்கோப்பையை ஒட்டி களைக்கட்டியுள்ள சேப்பாக்கம்..!