இந்தியா-இங்கிலாந்து இடையே 5வது டெஸ்ட் கிரிக்கெட்.. தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!!

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையே 5வது டெஸ்ட் கிரிக்கெட்.. தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!!

இங்கிலாந்தின் பெர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது.

இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆட களமிறங்கியது. துவக்க வீரர்களாக ஷப்மன் கில் மற்றும் புஜாரா ஆகியோர் களமிறங்கினர். ஷுப்மன் கில் 17 ரன்களுக்கும் புஜாரா 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, ஹனுமா விஹாரி, ஷ்ரேயஸ் ஐயரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

இதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்தும், ஜடேஜாவும் இணைந்து பொறுப்புடன் விளையாடினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார்.

111 பந்துகளில் 146 ரன்கள் எடுத்த நிலையில், ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்துள்ளது.  ரவீந்திர ஜடேஜா 83 ரன்களுடனும் முகமது சமி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

முதல் இன்னிங்சில் 89 பந்துகளில் சதமடித்த ரிஷப்பந்த் குறைந்த பந்துகளில் சதமடித்த விக்கெட் கீப்பர் என்ற மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்தார். கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி 93 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ரிசப் பந்த் முறியடித்துள்ளார்.