வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம் மாநிலம்.. கனமழையால் 8 லட்சம் மக்கள் தவிப்பு- 25 பேர் பலி

அசாமில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களை அறுவடை செய்து வரும் விவசாயிகள், தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம் மாநிலம்.. கனமழையால் 8 லட்சம் மக்கள் தவிப்பு- 25 பேர் பலி

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் சுமார் 8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார்  29 மாவட்டங்களைச் சேர்ந்த 2,585 கிராமங்கள்  வெள்ளப் பேரிடரில் சிக்கியுள்ள நிலையில், நகவோன் மாவட்டம் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

மீட்பு பணிகளுக்காக களமிறங்கியுள்ள ராணுவம், துணை ராணுவப் படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இதுவரை 21,884 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில்  தங்க வைத்துள்ளனர். மேலும் ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் கனமழையில் சிக்கி 25 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே வெள்ளம் வடியாத வீடுகளால் அவதிக்குள்ளாகி வரும் மக்கள், ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நகவோன் மாவட்டத்தின் திப்ஃபாலு கிராமத்தை சேர்ந்த மக்கள், மார்பு அளவு வெள்ளத்தில் நின்றபடி,  நீரில் மூழ்கிய பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர். மேலும் சாகுபடி செய்த பயிர்களில் பெரும்பாலானவை சேதமடைந்து விட்டதாகவும், மீதமுள்ளதை குடும்ப தேவைக்காக பாதுகாக்க முயற்சிப்பதாகவும் விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.