இன்று வெளியாகும் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல்...

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று வெளியாகும் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல்...

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு, கடந்த 2019-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவி ஏற்றது. அதன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி கடந்த மாதம் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில் புதிய பட்டியல் தயாராகி விட்டதாகவும் எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய அமைச்சரவையில் தற்போது 53 அமைச்சர்கள் உள்ளனர். அமைச்சரவையில் 81 அமைச்சர்கள் வரை இடம் பெற முடியும். இதனடிப்படையில் இன்னும் 28 பேர் வரை அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவையில் இடம் பெறவுள்ளவர்கள்  பாஜக மேலிட அழைப்பின் பேரில் டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர்.

அதன் வரிசையில் அதிருப்தி காரணமாக காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா டெல்லிக்கு விரைந்துள்ளார். முன்னதாக உஜ்ஜைனி கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், விமானம் மூலம் டெல்லி சென்றடைந்துள்ளார். 

இதேபோல் அசாம் மாநிலத்தின் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சர்பானந்த சோனோவாலுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட உள்ளது. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பாஜக எம்.பியுமான நாராயண் ரானே-வுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. அதனை நிரூபிக்கும் வகையில் அவர் விரைவில் கோவாவில் இருந்து டெல்லி புறப்பட உள்ளதாக கூறப்படுகிறது.